;
Athirady Tamil News

அபாயகரமான வெடிபொருட்களுடன் இலங்கைக்கு வரவிருந்த கப்பல் – எழுந்துள்ள பாரிய குற்றச்சாட்டு

0

சிங்கப்பூர் (Singapore) சரக்கு கப்பலான டாலி, 764 தொன் அபாயகரமான பொருட்களுடன் இலங்கை (Sri lanka) நோக்கி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்தக் கப்பல் உலகின் மிகப்பெரிய கடற்படைத் தளங்களான நியூயோர்க், விர்ஜினியா, நோர்போக் போன்ற இடங்களுக்குச் சென்று கொழும்புக்கு நோக்கி வருகை தந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (2.4.2024) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது ஆபத்தான நிலை
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பாசல் சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் துறைமுகத்தில் இறக்குமதி, ஏற்றுமதி, பரிமாற்றம் மற்றும் நிறுத்தி வைத்தல் ஆகிய 4 விடயங்களிலும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

இதற்கான அனுமதி மத்திய சுற்றாடல் அதிகார சபையிடமிருந்து பெறப்படவில்லை. நாட்டில் யாருக்கும் தெரியாமல் இவ்வாறான பொருட்கள் அனுப்பப்படுவதில்லை எனவும் இது ஆபத்தான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆபத்தான நிலை குறித்து ஒரு நாடு என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி எவ்வாறு இவ்வாறான தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை நாம் ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

வணிக மைய ஒழுங்குமுறை
2013 இல் உருவாக்கப்பட்ட வணிக மைய ஒழுங்குமுறை மூலம் (The Commercial Hub Regulations) சில விதிகள் அமுல்படுத்தப்படாமல் பொருட்கள் மற்றும் பண்டங்கள் நாட்டிற்கு வருகின்றன.

இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, 263 குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் கூட நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அப்போது சிரமப்பட்டு அக்குப்பைகள் திருப்பி அனுப்பப்பட்டதால் இதில் கவனம் செலுத்துங்கள். அரசாங்கம் பசுமைக் கொள்கையை கடைப்பிடித்து சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டு வருவதால் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும், இது குற்றச் செயல் என்றும், இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடுமையான ஆபத்தான பொருட்கள்
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் விபத்துக்குள்ளான சிங்கப்பூர் சரக்கு கப்பலான டாலி, 764 தொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4700 கொள்கலன்கள் இருந்தன.

அவற்றில் 56 வெடிபொருட்கள், லித்தியம் அயன் பேட்டரி, எரியக்கூடிய பொருட்கள் போன்ற அபாயகரமான பொருட்கள் மற்றும் 9 ஆவது வகை அல்லது கடுமையான ஆபத்தான பொருட்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 4,644 ஏனைய கொள்கலன்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.