;
Athirady Tamil News

கோவிட் காலப்பகுதியில் கட்டாய சடலம் எரிப்பிற்கு மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரம்: அமைச்சர் ஜீவன்

0

கோவிட் (Covid – 19) பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் (Hatton) டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தவறான கொள்கைகள்
மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருடம் ஜனவரி மாதமே நான் அமைச்சராக பதவியேற்றேன். எனினும், இந்த விடயத்தில் நீர்வழங்கல் அமைச்சு தொடர்புபட்டிருந்ததால் மன்னிப்பு கோருகின்றேன். அதேபோல அக்காலப்பகுதியில் குறித்த விடயதானம் தொடர்பில் அமைச்சராக இருந்தவர்கள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

கோவிட்டால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது, நீர்வளம் மாசுபடாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி இருந்த போதிலும், விஞ்ஞான பூர்வமான விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது.

நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மேற்படி திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.

துறைசார் நிபுணர்களால் தவறான கொள்கையே கடைபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, முஸ்லிம் மக்களிடம் அரசு முறையாக மன்னிப்பு கோர வேண்டும் என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்” என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.