;
Athirady Tamil News

நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்: நெதன்யாகு கைதாணைக்கு எதிராக இஸ்ரேல் அழைப்பு

0

இஸ்ரேல் தலைவர்கள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணையை நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது.

நாகரிக நாடுகள் ஒன்றிணைந்து
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கான், தமது அலுவலகம் மூன்று மூத்த ஹமாஸ் அதிகாரிகள், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது போர் குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கைது வாரண்டுக்கு முன் விசாரணைக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்தார்.

இந்த விவகாரம் இஸ்ரேல் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளரான Tal Heinrich, உலகின் நாகரிக நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன் கைதாணை பிறப்பித்தாலும், நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்த தேவையில்லை என்பது குறித்தும் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தங்களின் தலைவர்கள் தொடர்பானது அல்ல என்றும், மாறாக இது எங்களின் உயிர்வாழ்வைப் பற்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பவில்லை என பிரித்தானியா
இதனிடையே, ஹமாஸ் படைகளிடம் இருந்து தங்களை பாதுகாக்கும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி கரீம் கான், காஸா பகுதியில் இஸ்ரேலுக்கு வேறு எந்த இலக்கு இருந்தாலும், அவர்களின் முறைகள் என்பது,

வேண்டுமென்றே மரணம் ஏற்படுத்துவது, பட்டினி, பெரும் துன்பம் மற்றும் பொதுமக்களின் உடல் அல்லது ஆரோக்கியத்திற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்துவது உள்ளிட்டவை என குறிப்பிட்டுள்ளார். இதுவே பெரும் குற்றமாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை மற்றும் அதன் அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் 124 நாடுகள் தொடர்புடைய நீதிமன்றத்தை அங்கீகரிப்பதுடன் நீதிமன்றக் கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டால் அவற்றை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த நாடுகளுக்கு பயணப்பட முடியாமல் போகும். இதனிடையே, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்லோவேனியா நாடுகள் திங்களன்று கானின் முடிவை ஆதரிப்பதாக தெரிவித்தன.

ஆனால் இஸ்ரேல் – காஸா விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக தாங்கள் நம்பவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தொடர்புடைய வழக்கு நீடித்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் சாத்தியம் குறித்தும் ஆயுத விற்பனை மற்றும் பாதுகாப்புத் துறையில் உடனடி தாக்கம் தொடர்பிலும் இஸ்ரேல் கவலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.