;
Athirady Tamil News

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புணே சிறுவனின் ரத்த மாதிரி: மருத்துவர்கள் கைது

0

புணேவில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக இரண்டு மருத்துவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், வேறு ஒருவரின் ரத்த மாதிரியை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புணேவில், மே 19ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில், மதுபோதையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கிய சிறுவன் மோதியதில் இருவர் பலியாகினர்.

இந்த வழக்கில் சிறுவன் மது அருந்தவில்லை என்று ரத்த பரிசோதனை முடிவு வெளியானதாக காவல்துறையினர் முதல்கட்டமாக தெரிவித்திருந்தனர்.

ஆனால், சிறுவன் கார் விபத்து ஏற்படுத்தியபோது மதுபோதையில் இருந்த விடியோக்களும், பாரில் மது அருந்திய விடியோக்களும் இணையத்தில் பரவி பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புணே காவல் ஆணையர் திங்கள்கிழமை காலை செய்தியாளர்களுடனான சந்திப்பில், சிறுவனின் ரத்த மாதிரியை மருத்துவமனை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

சிறுவனுக்கு “கடந்த மே 19 காலை 11 மணிக்கு சாசூன் மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. ஆனால், அந்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு வேறு ஒருவரின் ரத்த மாதிரி தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரத்த மாதிரியை தடயவியல் துறையின் தலைவர் அஜய் தாவ்ரேவின் அறிவுறுத்தலின் பேரில், தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீஹரி ஹலனர் மாற்றியுள்ளார். மருத்துவமனையின் கண்காணிப்பு கேமிராக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மருத்துவர் அஜய் தாவ்ரேவை நேரடியாக சிறுவனின் தந்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இரு மருத்துவர்களையும் கைது செய்துள்ளோம். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்கவுள்ளோம். ரத்த மாதிரியை மாற்றிய நபரை தேடி வருகிறோம். சிறுவனின் தந்தையை போலீஸ் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளி சிறுவன் என்பதால், சட்டப்பிரிவு 75 மற்றும் 77ன்படி, குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு பிறகு, சிறுவனுக்கு வழங்கப்பட்ட பிணை ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, வீட்டின் கார் ஓட்டுநரை மிரட்டி சரணடைய கூறிய சிறுவனின் தாத்தா சுரேந்திர குமாரை, வழக்கை திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.