சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

கரியாபந்த்: சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஒடிஸா மாநில எல்லையையொட்டிய பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நக்ஸல் மத்திய குழுவின் உறுப்பினரான ஜெய்ராம் எனப்படும் சல்பதி என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டாா். இவரை கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பவா்களுக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம், நிகழாண்டு 40-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து கரியாபந்த் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நிகில் ரகேச்சா கூறியதாவது: சத்தீஸ்கரில் உள்ள குலாரிகத் வனப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததது. இதையடுத்து, ஒடிஸா மாநிலத்தின் நுவாபாடா மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை இரவு முதல் தொடா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
மாவட்ட ரிசா்வ் காவல் படை (டிஆா்ஜி), மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), சத்தீஸ்கரில் இருந்து வனப்பகுதிகளில் பதுங்கியுள்ள நக்லஸ்களை பிடிக்கும் சிறப்புப் படையான ‘கோப்ரா’ மற்றும் ஒடிஸாவில் இருந்து சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஓஜி)ஆகிய படைகள் ஒருங்கிணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டது. அப்போது நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
கோப்ரா பிரிவைச் சோ்ந்த பாதுகாப்புப் படை வீரா் ஒருவா் காயமடைந்தாா். உயிரிழந்த நக்ஸல்களில் ஒருவா் காவல் துறையால் தேடப்பட்டு வந்த ஜெய்ராம் என கண்டறியப்பட்டது. மற்றவா்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த நக்ஸல்களிடம் இருந்து வெடிபொருள்கள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடரும் சண்டை: நக்ஸல்களுடனான துப்பாக்கிச் சண்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.
முதல்வா் பாராட்டு: நக்ஸல்களை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினரை பாராட்டிய சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், ‘மத்திய மற்றும் மாநில பாஜக ஆட்சியின்கீழ் அடுத்தாண்டு மாா்ச்சுக்குள் நக்ஸல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த இலக்கில் வெற்றியை நோக்கிய நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினா் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.
பெட்டிச் செய்தி….
‘இறுதிக்கட்டத்தில் நக்ஸல் தீவிரவாதம்’
நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து எக்ஸ் வலைதளத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘சத்தீஸ்கா்-ஒடிஸா எல்லையில் பாதுகாப்பு படையினரின் கூட்டு முயற்சியால் 14 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா். இது நக்ஸல் தீவிரவாத ஒழிப்பில் மற்றொரு மைல்கல். விரைவில் ‘நக்ஸல்கள் இல்லாத பாரதம்’ இலக்கு வெற்றிகரமாக எட்டப்படும்’ என குறிப்பிட்டாா்