;
Athirady Tamil News

1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!

0

தைவான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந்தி பல்லிகள், தைவானின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சுமார் 2,00,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தை அதிகமாக சார்ந்துள்ள தீவு நாடான தைவானில், இந்த பச்சைப் பேரோந்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பது அந்நாட்டின் விவசாயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதற்காக பணியமர்த்தப்பட்ட சிறப்பு வேட்டைக் குழுவினர் சுமார் 70,000 பச்சைப் பேரோந்திகளை கொன்றனர். கொல்லப்படும் ஒவ்வொரு பேரோந்திக்கும் தலா 15 டாலர்கள் சன்மானமாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வருடம் (2025) சுமார் 1,20,000 பேரோந்திகளை கொல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்காக தற்போது அந்நாட்டின் உள்ளூர் அரசு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இயற்கையாகவே தைவான் நாட்டில் இந்த பேரோந்திகளை வேட்டையாட எந்தவொரு வேட்டையாடி விலங்கினமும் இல்லாதது அந்நாட்டில் அதன் எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இருப்பினும், கூர்மையான நகங்களையும் பற்களையும் இந்த பச்சைப் பேரோந்திகள் இயற்கையாகவே பெற்றிருந்தாலும் எந்த உயிரினத்தையும் பெரும்பாலும் அவை தாக்குவது இல்லை.

ஆண் பேரோந்திகள் 2 அடி நீளம் வளர்ந்து 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும் எனக்கூறப்படும் நிலையில் பெண் பேரோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் இடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், செல்லப் பிராணிகளாக இந்த பேரோந்திகள் வீட்டில் வளர்க்கபடும்போது பெரும்பாலும் 1 ஆண்டுக்குள் உயிரிழந்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மீன்பிடிக்க பயன்படுத்தும் ஈட்டிகளைக் கொண்டு மனிதாபிமான முறையில் இந்த பச்சைப் பேரோந்திகளை வேட்டையாட தைவான் மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.