யுஜிசி – நெட் வினாத்தாள் கசிவு வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிக்கை

யுஜிசி -நெட் வினாத் தாள் கசிவு வழக்கை முடித்துக் கொள்வதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணி நியமனம் மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை பெறுவதற்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜுன் 19-ம் தேதி இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் வினாத் தாள் டார்க்நெட்டில் கசிந்ததாகவும் டெலிகிராமில் விற்பனை செய்யப்பட்டதாகவும் கிடைத்த தகவலின் பேரில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என சிபிஐ கூறியுள்ளது. மேலும் இந்த அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகத்துக்கும் அனுப்பியுள்ளது. அறிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துக் கொள்வதா அல்லது மேலும் விசாரணைக்கு உத்தரவிடுவதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்வு நாளன்று, தேர்வின் இரண்டாவது ஷிப்டுக்கு முன்னதாக முதல் ஷிப்ட் தேர்வின் வினாத்தாள் டெலிகிராம் வலைதளத்தில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. வினாத்தாளின் ஸ்கிரீன்ஷாட்டை பரப்பிய நபர், அதில் பதிவான நேரத்தை திருத்தி, தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.