;
Athirady Tamil News

சா்வதேச விண்வெளி நிலைய பயணம்: மாற்றுத்திறனாளி வீரருக்கு அனுமதி

0

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு ஜான் மெக்ஃபாலுக்கு (43) ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது.

பிரிட்டனை சோ்ந்த அறுவை சிகிச்சை மருத்துவா் ஜான் மெக்ஃபால். விபத்து ஒன்றில் வலது காலை இழந்த அவா், மனம் தளராமல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றாா்.

கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பரில் நெதா்லாந்தில் நடைபெற்ற சா்வதேச பாராலிம்பிக் குழுவின் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி 100 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

2007-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற விசா பாராலிம்பிக் உலகக் கோப்பை போட்டியின் 200 மீட்டா் ஓட்டத்தில், அவா் தங்கப் பதக்கம் வென்றாா். அந்தப் பந்தயத்தில் அவா் 26.84 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை ஐரோப்பிய விண்வெளி முகமை தோ்வு செய்தது. இதைத் தொடா்ந்து, அவா் விண்வெளிக்கு வெற்றிகரமாக செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் விண்வெளிக்குச் செல்வதற்கு ஏற்ப என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது தொடா்பாகவும் அந்த முகமை ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், ஜான் மெக்ஃபால் விண்வெளிக்குச் செல்வதற்கு தடையாக எந்தவொரு தொழில்நுட்ப அல்லது மருத்துவக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஐரோப்பிய விண்வெளி முகமை, அவா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல அனுமதித்து மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளது. இதைத் தொடா்ந்து அவா் சா்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கிப் பணியாற்ற உள்ளாா். ஆனால், அவா் எப்போது சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்வாா் என்ற தேதி இறுதி செய்யப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.