நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் – எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
உதவிகளை நிறுத்திய அமெரிக்கா
உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவுக்கு கைமாறாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை காலவரையின்றி வெட்டி எடுக்கும் உரிமத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டுமென டிரம்ப் வலியுறுத்தினார்.
அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதின் மற்ற ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்தால், நேட்டோ நாடுகள் என்ற அடிப்படையில், அமெரிக்கா உதவிக்கு வருமா என்ற சந்தேகம் ஐரோப்பிய நாடுகளுக்கு எழுந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட அவசர உச்சிமாநாட்டில் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியை அதிகரிப்பது தொடர்பாக விவாதித்தனர்.
எலான் மஸ்க்
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பரும், DOGE அமைப்பின் தலைவருமான எலான் மஸ்க் நேட்டோவில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேட்டோவில் இருந்து வெளியேற வேண்டும். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா செலவு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
முன்னதாகி கடந்த மார்ச் 3ஆம் திகதியன்று நேட்டோ மற்றும் ஐ.நா அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்பும், நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் கட்டணங்களை செலுத்தப் போவதில்லை என்றால், அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என கூறினார்.
நேட்டோ
நேட்டோ(NATO) என்பது அதன் உறுப்பு நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நாடுகளுக்கு இடையிலான இராணுவக் கூட்டணியாகும்.
நேட்டோ உறுப்பு நாட்டின் மீது ஒரு நாடு தாக்குதல் நடத்தினால், மற்ற நாடுகள் உதவ வேண்டும். நேட்டோவில் 30 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா உட்பட இரு தென் அமெரிக்க நாடுகள் என 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது.