;
Athirady Tamil News

எக்ஸ்(ட்விட்டர்) மீது சைபர் தாக்குதல்! யாரால்? எதற்காக?

0

எக்ஸ் வலைதளம் சைபர் தாக்குதலால் திங்கள்கிழமை (மார்ச் 10) திடீரென முடங்கியது. மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது.

இதைத்தொடர்ந்தும், எக்ஸ் வலைதளம் அவ்வப்போது முடங்கியதால் பயனர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனர்.

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளம் அண்மைக் காலங்களில் தொழில்நுட்ப கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ முடங்கப்படாத நிலையில், நேற்று திடீரென முடங்கியது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளிலும் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் தவித்தனர்.

இந்த நிலையில், இதற்கு சைபர் தாக்குதலே முக்கிய காரணமென தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.

தொழில்நுட்ப ரீதியாக நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவவமைக்கப்பட்டுள்ள எக்ஸ் தளம் சைபர் தாக்குதலால் பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதை மென்பொருள் துறை சார் வல்லுநர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

பாலஸ்தீன ஆதரவு பிரிவைச் சேர்ந்த இணையவழி ஹேக்கர்கள் குழுவான ‘டார்க் ஸ்டார்ம்’ இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

இது குறித்து எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: “என்ன நடந்துள்ளது என்பதை சரியாகக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை. சைபர் தாக்குதல் மூலம் எக்ஸ் த்ளத்தின் அமைப்பை சீர்குலைக்க மிகப்பெரியளவில் முயற்சித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. சைபர் தாக்குதல் நடத்தியவர்களின் ஐ.பி. முகவரியானது உக்ரைன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதே இப்போதைக்கு அறியப்பட்டுள்ள தகவல்” என்று கூறியுள்ளார்.

எனினும், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை ‘டார்க் ஸ்டார்ம்’ குழு தெளிவுபடுத்தவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.