;
Athirady Tamil News

400+ பயணிகளுடன் ரயில் கடத்தல்

0

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கு மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் நின்றுள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த ரயில் கடத்தலுக்கு பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாதுகாப்புப் படையினர் உட்பட பயணிகள் அனைவரும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட முயன்றால், அனைத்து பிணைக் கைதிகளும் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

க்வெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது போலான் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க போலான் மாவட்டத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் ரயில் மற்றும் பயணிகளின் நிலைமை குறித்து உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஷாஹித் ரிண்ட் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானை விடுவிக்க பிஎல்ஏ உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பிறகு, அது பலுசிஸ்தானை தன்னுடன் இணைத்துக்கொண்டது. அது முதல் பலுசிஸ்தான் விடுதலைக்காக பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. எனினும், இந்த மாகாணம் குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ளது. பாகிஸ்தான் மத்திய அரசு, பலுசிஸ்தானுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், தங்கள் மாகாணம் சுரண்டப்படுவதாகவும் பலுசிஸ்தான் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.