;
Athirady Tamil News

மியான்மரில் ஒரே நாளில் 15 முறை நிலநடுக்கம்! என்ன காரணம்?

0

மியான்மரில்(பர்மா) ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது.

மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய புள்ளிவிவரங்களின்படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) பகல் 12 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளியாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, வலுவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 புள்ளியாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்கள் பல பலத்த சேதமடைந்திருப்பதையும் இடிபாடுகளில் பலர் புதைந்திருப்பதையும் அங்கிருந்து வரும் படங்கள் நமக்கு வெளிக்காட்டுகின்றன. நெஞ்சை உலுக்கும் இந்த சேதங்களைப் பார்க்கும்போது, மியான்மரில் ஏற்பட்டுள்ள இந்த நிலஅதிர்வானது எந்தளவுக்கு சக்திவாய்ந்ததாக இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

இதுமட்டுமல்லாது, சற்றே நம்ப முடியாத தகவலாக, வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஒரே நாளில் அதுவும் 10 மணி நேரத்துக்குள் மியான்மரில் 15 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்?

பூமியின் நிலப்பரப்புக்கு கீழே உள்ள டெக்டோனிக் பிளேட்ஸ் என்கிற அடர்த்தியான பாறை தகடுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் பூமியின் மேலே, அதிர்வு உண்டாகிறது.

அந்த வகையில், இந்தியா, யூரேசியா ஆகிய இரு பூலோக தகடுகளின் மேலே அமைந்துள்ள பகுதியே மியான்மர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

மேற்கண்ட இரு தகடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியே ‘சாய்காங்க் ஃபால்ட்’ என்றழைக்கப்படுகிறது. (வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மையப்பகுதியாக சாய்காங்க் நகரம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.)

இவ்விரு தகடுகளுக்கிமிடையிலான எல்லைப் பகுதியானது, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நேராக சுமார் 1,200 கி.மீ. நீளத்துக்கு அமைந்திருக்கிறது. இந்த பகுதி வரையறைக்குள், பூமிக்கு மேலே, மியான்மர் தேசத்தின் முக்கிய நகரங்களான மண்டலாய், யாங்கோன் அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவலின்படி, இந்தியா – யூரேசியா தகடுகள் இரண்டும் சாய்வாக உரசிக் கொண்டதன் விளைவே மேற்கண்ட சக்திவாய்ந்த நில அதிர்வை உண்டாக்கியுள்ளது.

பூமிக்கு கீழே நிகழும் இத்தகைய நிகழ்வுகளுக்கு ‘ஸ்ட்ரைக்-ஸ்லிப் ஃபால்ட்டிங்’ எனப் பெயர். தகடுகள் உரசிக்கொண்ட பகுதியானது, பூமியின் நிலப்பரப்பிலிருந்து வெறும் 10 கி.மீ. கீழே அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், பூமியின் மேலே சக்திவாய்ந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள உயிர், பொருள் இழப்புகளும் அதிகம்!

முன்னதாக, இதேபோன்ற ‘ஸ்ட்ரைக்-ஸ்லிப் ஃபால்ட்டிங்’ நிகழ்வானது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1994-ஆம் ஆண்டில் நார்த்ரிட்ஜில் நிகழ்ந்திருந்தபோது, அப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், பேரிழப்பையும் ஏற்படுத்த தவறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் புவி ஆராய்ச்சியில் நிபுணத்துவமிக்க பேராசிரியர் டாக்டர் ரெபேக்கா பெல்.

நில அதிர்வுகளால் அடிக்கடி பாதிக்கப்படும் ஜப்பான், கலிஃபோர்னியாவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இத்தகைய நில அதிர்வுகளை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அங்கே நிலநடுக்கம் ஏற்படும்போது, குறைந்த அளவிலேயே சேதமும் ஏற்படுவதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.

ஆனால், மியான்மரில் இருந்த பெரும்பான்மையான கட்டடங்கள் மேற்கண்டவாறு நில அதிர்வுகளை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு கட்டப்படவில்லை என்பதாலேயே, சேதம் அதிகமாகியிருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள வளையத்துக்குள் அமைந்துள்ள பகுதிகளில் வசித்துவந்த மக்கள்தொகை 8 லட்சம் வரை இருக்கும் என்று தரவுகள் தெரிவிப்பதால், உயிரிழப்பும் உயர வாய்ப்பு அதிகம் என்றே அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

சனிக்கிழமை(மார்ச் 29) பகல் நிலவரப்படி, மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள், பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிவிட்டதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.