இந்திய மாணவர்களை அச்சுறுத்தும் டிரம்ப் அரசு!

அமெரிக்காவில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களையும் அமெரிக்க அரசு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடுவது குறித்து மட்டுமே பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், விசாக்களுடன் படித்து வெளிநாட்டு மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சியிலும் அமெரிக்க அரசு ஈடுபட்டிருப்பது குறித்து பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. பொதுவாக, அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் எஃப் 1 விசாக்களுக்குத்தான் விண்ணப்பிக்கின்றனர்; தொழிற்படிப்புக்காக செல்வோருக்கு எம்-1 விசாக்கள் வழங்கப்படுகின்றன.
2023 – 24 ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம் 11.2 லட்சம் சர்வதேச மாணவர்கள் படித்ததாக அறிக்கை கூறுகிறது. இவர்கள் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு சுமார் 43.8 பில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர்களால் அமெரிகாவில் 3.78 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. இதனிடையே, இந்திய மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை, 2023 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 2024-ல் 34 சதவிகிதம்வரையில் குறைந்துள்ளது.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்க அரசு வெளியேற்றும் வரும்நிலையில், அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விசாக்களையும் அந்நாட்டு அரசு ரத்து செய்து வருகிறது. அதிவேகமாகச் செல்லுதல், சமூக ஊடகப் பதிவுகள் உள்ளிட்ட சிறு காரணங்களுக்காகக்கூட விசாக்களை ரத்து செய்து வருகிறது. இவ்வாறான இக்கட்டான கெடுபிடிகள் இருப்பதால், தங்களின் குடியேற்ற ஆவணங்களை எப்போதும் தயாராக வைத்திருக்குமாறு கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்துகின்றன.
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) மையத்துக்குச் சென்றால், ஏதேனும் நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இந்தச் செயல்முறையில் அதிகம் செலவாகும் என்பதுடன், நீண்ட காலமும் எடுக்கும் என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒருமுறை உங்கள் மாணவர் விசா நிராகரிக்கப்பட்டால், அடுத்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் செயல்முறையை மட்டுமே உங்களால் செய்ய முடியும். அதுமட்டுமின்றி, இந்தக் காலகட்டத்தில் பணிபுரியவோ பயிற்சி பெறவோ முடியாது. அதிகளவிலான வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம், விசா ரத்து செய்யப்படும் வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினால், சோதனை மேற்கொள்ளப்படும்; இதுவே, விசா ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுப்பதாய் அமையும்.
இதனிடையே, அமெரிக்காவில் குடியேறுவோருக்கு சேவைகளை வழங்கி வந்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகத்தையும் டிரம்ப் அரசு மூடிவிட்டது. 2024-ல் மட்டும் சுமார் 30,000 விண்ணப்பங்களை, இந்த அலுவலகம் செயல்படுத்தியுள்ளது.