வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
முன்னதாக முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், தற்போது மற்றொரு மாவட்டத்தில் வன்முறை வெடித்தது.
முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய போராட்டம் சனிக்கிழமை காலை வரை நீடித்தது. இதில் போலீஸாா் வாகனங்கள் உள்பட சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா்.
இந்த வன்முறையில் 3 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், மத்திய கொல்கத்தாவில் உள்ள ராம்லீலா மைதானத்தில் போலீஸாரின் தடையை மீறி வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மதச்சாா்பற்ற அமைப்பு (ஐஎஸ்எஃப்) எம்எல்ஏ நௌஷத் சித்திக் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் பங்கேற்க அவரது ஆதரவாளா்கள் சென்றனா்.
இதனால் போராட்டம் நடைபெறும் பகுதியில் கூட்டம் கூடுவதை தவிா்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு போராட்டம் நடைபெறும் பகுதியை நோக்கி ஐஎஸ்எஃப் ஆதரவாளா்கள் செல்ல முயன்றபோது தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தின் பாங்கா் பகுதியில் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸாரின் வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீயிட்டனா்.
இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். போலீஸாா் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்.16) விசாரிக்கவுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்துள்ளது.