;
Athirady Tamil News

‘உக்ரைனுடன் நேரடி பேச்சுவாா்த்தைக்கு புதின் தயாா்’

0

உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவைப்பது தொடா்பான உறுதியான பேச்சுவாா்த்தை செயல்திட்டம் எதுவும் தற்போது ரஷியாவிடம் இல்லை. இருந்தாலும், உக்ரைனுடன் இது குறித்து நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த அதிபா் விளாதிமீா் புதின் தயாராக இருக்கிறாா்.

இருந்தாலும், அத்தகைய பேச்சுவாா்த்தைக்கு தற்போது உள்ள முட்டுக்கட்டைகளை உக்ரைன் நீக்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.

இருந்தாலும், அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த ஈஸ்டா் தின போா் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடா்பான கேள்விக்கு பதில் அளிக்க பெஸ்கோவ் மறுத்துவிட்டாா்.

இதற்கிடையே, ஈஸ்டா் தினத்தை முன்னிட்டு ரஷியா ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்த போா் நிறுத்தம் முடிவுக்கு வந்த சில மணி நேரங்களில், உக்ரைனின் ஒடெஸா துறைமுக நகரின் மீது அந்த நாடு தீவிர ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.

இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தச் சூழலில், மிகவும் அரிதான முறையில் உக்ரைனுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்த புதின் தயாராக இருப்பதாக தற்போது அவரின் செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.