;
Athirady Tamil News

வரலாற்றுத் தவறை மீண்டும் செய்யாதீர் – உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் முன்னாள் எம்.பி. சித்தார்த்தன் தெரிவிப்பு

0

நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.பி.பி.யைத் தெரிவுசெய்தமைக்காக பலர் தற்போது வருத்தப்படுகின்றனர். எனவே, அவ்வாறான தவறை மீண்டும் செய்யவேண்டாம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு, யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று(26) இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மேலும் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றத் தேர்தலின்போது பெருவாரியான மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குத் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். ஆனால், அன்றைய முடிவு தவறு என்று மக்களில் பலர் உணர்ந்துள்ளனர். இன்று மக்களைச் சந்திக்கும் போதெல்லாம் தமது தவறு தொடர்பில் வெளிப்படையாக அவர்கள் கருத்துக் கூறுகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதியான அநுர, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று வலுவாகக் குரல்கொடுத்த ஒருவர். ஆனால், அதிகாரம் கைகளுக்கு வந்ததும் அந்தச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அவரிடம் இல்லை. தற்போது அவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் தேர்தல் கால வாக்குறுதிகளே. தையிட்டி திஸ்ஸ விகாரை உட்பட பல வாக்குறுதிகளை வழங்குவதை தற்போது அவதானிக்க முடிகின்றது. எனவே எமது மக்கள் அவர்களின் கபடத்தனமான வாக்குறுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். தாம் வழங்கும் வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கத்தினர் நிறைவேற்ற மாட்டார்கள். இதுவே உண்மை – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.