;
Athirady Tamil News

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு

0

1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாவது:

”இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இரு நாட்டு தலைவர்களும் எடுத்த உறுதியான முடிவால் பல உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மிக்க, துணிவான முடிவை எடுப்பதற்கு அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

அதேநேரம், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்.

மேலும், “ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு” காஷ்மீர் தொடர்பான பிரச்னைக்கு தீர்வை காண உங்கள் இருவருடனும் இணைந்து மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறேன்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சமரசத்தின்பேரில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் முதலில் தெரிவித்தாா். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் மத்திய அரசும் சண்டை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது.

சண்டை நிறுத்த உடன்பாட்டின்கீழ் சனிக்கிழமை மாலை 5 மணியில் இருந்து தரை-வான்-கடல் வழியிலான அனைத்து ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளை நிறுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா், இந்திய தரப்பை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதைத் தொடா்ந்து உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த உடன்பாட்டின்கீழ் இருதரப்பிலும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா்கள் மே 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) மீண்டும் பேசவுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.