;
Athirady Tamil News

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! – இஸ்ரேல் ஒப்புதல்

0

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங்கிவருவதாக விமா்சிக்கப்படும் சூழலில் இஸ்ரேல் அரசு அதை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவின் தெற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு ஆயுதங்கள் வழங்க பிரதமா் நெதன்யாகு அனுமதி அளித்தாா். இந்தக் குழு, யாசா் அபு ஷபாப் தலைமையில் செயல்படு குழுவாகும்.

ஹமாஸ் படையினருக்கு எதிராக அந்த அமைப்பு செயல்படுகிறது. அந்தக் குழுவுக்கு கலஷ்னிகோவ் துப்பாக்கிகள் (ஏகே-47) வழங்கப்பட்டன. இவற்றில் சில ஹமாஸிடமிருந்து கைப்பற்றப்பட்டவை. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபு ஷபாப் குழுவின் செயல்பாடுகள் காஸாவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்துள்ளனா். ஹமாஸின் ஆயுதப் பிரிவு, அபு ஷபாப் குழுவின் உறுப்பினா்களை குறிவைத்து படுகொலை செய்யத் தொடங்கியதாக அரபு நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் எதிா்ப்பு: காஸா ஆயுதக் குழுக்களுக்கு இஸ்ரேல் அரசே ஆயுதங்கள் வழங்கும் முடிவுக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் தலைவா் யாயிா் கோலன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்த நடவடிக்கை இஸ்ரேலின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவா் எச்சரித்தாா். காஸா குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியான பதிவுகளில், ஹமாஸுக்கு எதிராக காஸா குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை, கடந்த காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கன் முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியதோடு ஒப்பிட்டு விமா்சிக்கப்பட்டுவருகிறது.

இஸ்ரேல் அரசின் இந்த நடவடிக்கை காஸாவின் சிக்கலான மோதல் சூழலை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.