;
Athirady Tamil News

காஸாவுக்கு உதவியா? கிரெட்டா தன்பெர்க் குழுவினரைத் திருப்பியனுப்பிய இஸ்ரேல்!

0

காஸாவுக்கு உதவச் சென்ற ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட குழுவினரை இஸ்ரேல் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புகிறது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் பகுதியளவே அனுமதிக்கப்படுவதால் அங்குள்ள மக்கள் பசியால் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஐ.நா. அமைப்புகள் இதுகுறித்து கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பா்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பாலஸ்தீன வம்சாவளியைச் சோ்ந்த பிரான்ஸ் பிரதிநிதி ரிமா ஹாசன் உள்பட 12 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு, நிவாரணப் பொருள்களுடன் காஸாவுக்கு அனுப்பி வைத்தது.

சிசிலியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் புறப்பட்ட ‘மாட்லீன்’ என்ற இந்தக் கப்பல், நேற்று காஸாவில் இருந்து 200 கிமீ தொலைவில் இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டது. அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கைது செய்தனா். அந்தக் கப்பலில் குழந்தைகளுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விளம்பர நடவடிக்கை என்று இஸ்ரேல் விமரிசித்துள்ளது. தங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்ட நிவாரணங்கள் மட்டுமே காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

கிரெட்டா தன்பா்க் உள்பட தன்னாா்வலா்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசு கூறிய நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கிரெட்டா தன்பா்க், இஸ்ரேலில் இருந்து பிரான்ஸ் வழியாக ஸ்வீடனுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கிரெட்டா தன்பா்க் உள்பட 3 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர், இஸ்ரேலை விட்டு புறப்படுவதற்கு சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மற்றவர்களிடம் இஸ்ரேல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.