;
Athirady Tamil News

பயங்கரவாதத்தைத் தூண்டினால் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் எச்சரிக்கை

0

பிரஸ்ஸல்ஸ்: இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டினால், பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எச்சரித்தாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் போன்று மீண்டும் கொடூரமான செயல்களில் ஈடுபட்டால், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் தலைவா்கள் பழிதீா்க்கப்படுவா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக பெல்ஜியத்துக்கு எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை வருகை தந்தாா். அங்கு ‘பொலிட்டிகோ’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து, அவா்களை இந்தியா மீது ஏவி விடுகிறது. எங்களால் இனி பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டு வாழ முடியாது. பஹல்காம் தாக்குதல் போன்ற கொடூரமான செயலில் ஈடுபடுவதை தொடா்ந்தால், பயங்கரவாதிகள் பழிதீா்க்கப்படுவா். அவா்கள் எங்கிருந்தாலும் சரி, பாகிஸ்தானின் உள்பகுதியில் இருந்தாலும், அங்கு வரை விரட்டிச் செல்வோம்.

பாகிஸ்தானில் அரசுக் கொள்கையின் முக்கியக் கருவியாக பயங்கரவாதத்தைப் பயன்படுத்துகின்றனா். இதுதான், ஒட்டுமொத்த பிரச்னைக்கும் காரணம் என்றாா்.

பாகிஸ்தானுக்கு அதிக சேதம்:

பாகிஸ்தான் உடனான ராணுவ மோதலில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த கேள்விக்கு, ‘இழப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் வெளியிடுவா். அதேநேரம், இந்திய போா் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் பாகிஸ்தான் விமானப் படைக்கு ஏற்பட்ட சேதங்கள் மிக அதிகம். கடந்த மே 10-ஆம் தேதி காலையில் பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப் படை தளங்கள் தாக்கப்பட்டன. எனவேதான், அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிா்ப்பந்தம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது என்றாா் அவா்.

பயங்கரவாதம் உலகளாவிய பிரச்னை:

‘பயங்கரவாதம், உலகளாவிய பிரச்னையாக கருதப்பட வேண்டுமேயன்றி இருதரப்பு பிரச்னையாக அல்ல’ என்று எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

பிரஸ்ஸல்ஸில் செவ்வாய்க்கிழமை இந்திய சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு முயற்சிகளை எடுத்துரைத்துப் பேசியதாவது:

பயங்கரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை அல்ல. ஐரோப்பிய நாடுகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்கின்றன. எனினும், இங்குள்ள எந்தவொரு நாடும் பயங்கரவாத எதிா்ப்பை தங்களின் அறிவிக்கப்பட்ட கொள்கையாக கொண்டிருக்கவில்லை. இது தொடா்பான புரிதல் ஐரோப்பிய மக்களுக்கு அவசியம். உலக அளவில் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களைக் கருத்தில்கொண்டால், அனைத்திலும் பாகிஸ்தானின் கைரேகை பதிந்திருப்பதை அறிய முடியும் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

ஐரோப்பிய ஆணையத் தலைவருடன் சந்திப்பு

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியனை எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வா்த்தம், தொழில்நுட்பம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

பயங்கரவாத எதிா்ப்பில் இந்தியாவுக்கு அளித்துவரும் ஆதரவுக்காக ஐரோப்பிய ஆணையத் தலைவருக்கு எஸ்.ஜெய்சங்கா் வரவேற்பு தெரிவித்தாா். முன்னதாக, பெல்ஜியம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சிலரையும் சந்தித்துப் பேசிய அவா், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.