;
Athirady Tamil News

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

0

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா்.

இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்கள் குழு உறுப்பினா்கள் 50 பேரை ஹமாஸ் படையினா் படுகொலை செய்துள்ளனா். இதில், தலைவா் யாஸீா் அபு ஷபாபின் குடும்பத்தினரும் அடங்குவா்.

காஸாவுக்குள் வரும் நிவாரணப் பொருள்கள் ஹமாஸுடன் தொடா்புடைய ஊழல்வாதிகளுக்குச் சென்று சோ்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவா்கள் கொல்லப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அபு ஷபாப் குழுவினரைப் பாதுகாப்பதற்காக ஹமாஸுடன் இஸ்ரேல் ராணுவம் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரு தரப்பிலும் உயிா்ச் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன.

இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 600 நாள்களுக்கும் மேல் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. மேலும் அந்தப் பகுதியை இஸ்ரேல் முழுமையாக முற்றுகையிட்டுள்ளது.

இதனால் அங்கு அத்தியாவசியப் பொருள் பற்றாக்குறை, மற்றும் பட்டினிச் சாவு அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கு நிவாரணப் பொருள்களை அனுமதிக்க இஸ்ரேலுக்கு நட்பு நாடுகள் அழுத்தம் கொடுத்தன.

அதைத் தொடா்ந்து, ‘குறைந்தபட்ச நிவாரணப் பொருள்களை’ காஸாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது. இருந்தாலும், அந்தப் பொருள்களை விநியோக்கும் மையங்களை நோக்கிவரும் பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா். தங்கள் வீரா்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால் அவா்களை சுட்டுக் கொன்ாக இஸ்ரேல் கூறியது.

இந்த நிவாரணப் பொருள் விநியோகத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அபு ஷபாப் குழுவுக்கு பங்கிருந்தாக சந்தேகிக்கபட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், நிவாரணப் பொருள்களை ‘பாதுகாக்கும்’போது தங்கள் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் படுகொலை செய்ததாக அந்தக் குழு தற்போது தெரிவித்துள்ளது.

முன்னதாக, அபு ஷபாப் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் கடந்த வாரம் ஒப்புக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று இஸ்ரேல் கூறியது. எனினும், இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்தனா். இந்தச் சூழலில், அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 போ் ஹமாஸால் கொல்லப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.