;
Athirady Tamil News

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்

0

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது.

போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும்.

25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.