;
Athirady Tamil News

ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! – உளவுத்துறை பரபரப்பு தகவல்

0

ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறையின் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 12 நாள்களுக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் (ஜூன் 25) அறிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளவாடங்களை பங்கர் பஸ்டர் குண்டுகளை போட்டு அழித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஈரானில் உள்ள அணுசக்தி தளவாடங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இந்தத் தாக்குதலால் ஈரானுக்கு சில பின்னடைவை மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழித்துவிட்டன என்பதைச் சந்தேகிக்கும் கூற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வெள்ளை மாளிகையும் கடுமையாக எதிர்த்துள்ளன.

ஜூன் 22 ஆம் தேதி ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி கட்டமைப்புகளில் ஓரளவு சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தத் தாக்குதலுக்குப் பிறகும் ஈரானின் கட்டமைப்புகள் பெரும்பாலும் அப்படியே இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததுள்ளன.

சில உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டிருந்தாலும், நிலத்தடியில் ஆழமாக உள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன என பென்டகனின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் பேச்சுக்கு முரணாகவுள்ளது.

இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அந்த அறிக்கை போலியானது. வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவுபடுத்தும் முயற்சி இது. ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன!” எனப் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலர் கரோலின் லீவிட் கூறுகையில், “அறிக்கையை முற்றிலும் தவறான ஒன்று. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க மேற்கொண்ட துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்தும் முயற்சியாகும்.

நீங்கள் 14 குண்டுகளை (13,000 கிலோ எடையுடன் உள்ள குண்டுகள்) இலக்குகளை நோக்கித் தாக்கும் போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

உளவுத்துறையுடன் நெருக்கமாக இருக்கும் தகவலறிந்த இருவர் இந்தத் தாக்குதல் குறித்து கூறும்போது, “அமெரிக்காவின் தாக்குதலை ஈரானும் எதிர்பார்த்திருக்கலாம். ஈரானின் 60 சதவிகித செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கலாம்” என்றும் கூறினர்.

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு சில நாள்களுக்கு முன்பாக யுரேனியத்தை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்ல லாரிகள் பயன்படுத்தப்பட்டது செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ‘தேசத்துரோகம்’ என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.