அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் இன்று (ஜூன் 25) பேசிய பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர், அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய 12, எஃப்-35 ரக போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து தங்களது அரசு வாங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், நாட்டோ நாடுகளின் வான்வழி அணுசக்திப் படை மேலும் பலம்பெரும் எனக் கூறப்படும் நிலையில், இதனை நாட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ருட்டே வரவேற்றுள்ளார்.
நாட்டோ அமைப்பிலுள்ள அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே அணுசக்தி தளவாடங்களைக் கொண்டுள்ளன.
கடந்த 1990-களில் பனிப்போர் முடிவடைந்த பின்னர் வான்வழியாக வீசப்படும் அணு ஆயுதங்களை படிப்படியாக நிறுத்திய பிரிட்டன், நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த அணு ஆயுதத் தளவாடங்களை மட்டுமே தற்போது கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டில், சுமார் 95 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 350 வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணைகளை, உக்ரைன் அரசுக்கு வழங்குவதாக பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, அந்நாட்டின் தேசிய வருவாயிலிருந்து சுமார் 2.3 சதவிகிதத்தை பிரிட்டன் அரசு பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்து வருகின்றது. இந்த முதலீடானது வரும் 2027 ஆம் ஆண்டு முதல் 2.6 சதவிகிதமாக அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.