;
Athirady Tamil News

நீதிக்கான போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்பட்டன

0

செம்மணியில் நீதிக்கான போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்பட்டன என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சரின் தலைமையிலான குழுவினரை அங்கிருந்த சிலர் வெளியேற்றி இருந்தனர்.

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பது மக்களுக்கு தெரியும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும், அதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

செம்மணியில் நேற்று குழப்பம் விளைவித்த இளைஞர்கள் சிலர், செம்மணி புதைகுழி சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் பிறந்திருந்தார்களா என்பதுகூட தெரியாது. இப்படியானவர்களே அரசியல் வாதிகளை விரட்டியடிக்கும் செயலில் ஈடுபட்டனர்.

அணையா விளக்கு போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம், அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆளுங்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என சமூகவலைத்தளங்கள் ஊடாக மக்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர்.

ஒரு அமைச்சராக நான் போராட்டத்தில் பங்கேற்பது அப்போராட்டத்தக்கு வலுசேர்க்கும் என்பதே உண்மை. அந்த செய்தி சர்வதேசம் வரை செல்லும்.

அந்தவகையில் மக்களை சந்திப்பதற்காக நேற்று நான் செம்மணிக்கு வந்தபோது ஒரு சில கும்பல், தமது அரசியல் இலாபத்துக்கு குழப்பம் விளைவித்தனர்.

இது தொடர்பில் மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் மனநிலை என்னவென்பதும், அவர்களின் வலி வேதனையும் எங்களுக்கு தெரியும்.

செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். செம்மணியில் மட்டும் அல்ல நாட்டில் மேலும் பல இடங்களிலும் புதை குழிகள் உள்ளன.

எமது கட்சி தலைவர் உட்பட தோழர்களும் கொன்று புதைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்களுக்கு நீதி வேண்டும். அதற்கான தேடலை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.

இனவாதம், மதவாத மற்றும் பிரதேச வாதத்துக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் எமது ஆட்சியில் முடிவு கட்டப்பட்டுள்ளது.

ஒரு சிறு கும்பல் எம்மை, விரட்ட முற்பட்டாலும் நாம் குரோத மனப்பான்மையுடன் செயற்படப்போவதில்லை. ஒரு அமைச்சராக நான் பாதுகாப்பு தரப்புடன் சென்றிருக்கலாம். சம்பவத்தின் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. தனி மனிதனாகவே நான் வந்தேன். ஏனெனில் மக்கள் எம்முடன் இருக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.