மங்கோலியாவில் வேகமெடுக்கும் தட்டம்மை பரவல்! 10,000-ஐ கடந்த பாதிப்புகள்!

மங்கோலியா நாட்டில், புதியதாக 232 தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாக தட்டம்மை தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தச் சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டில் புதியதாக 232 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெறுவோரில் 260-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதன்மூலம், தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 8,405 பேர் குணமடைந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொற்றினால், பெரும்பாலும் பள்ளிச் செல்லும் வயதுடைய குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அந்நாட்டில் தற்போது வரை 10,065 பேர் பாதிக்கப்பட்டதாக தேசிய தொற்று நோய் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
தட்டம்மை தொற்றானது, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் இன்றளவும் பரவலாக காணப்படுகிறது. இதனால், மங்கோலியா நாட்டிலுள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.