நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்பு

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையம் மற்றும் மாநில நலத்துறை உறுப்பினர்கள் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அது ஒரு சட்டவிரோத முதியோர் இல்லம் என்று மகளிர் ஆணைய உறுப்பினர் மீனாட்சி பரலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சோதனையின் போது, வயதான பெண் ஒருவர் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். மற்ற முதியவர்கள் அடித்தளம் போன்ற அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். சில ஆண்களிடம் துணிகள் கூட இல்லை, அதே நேரத்தில் பல வயதான பெண்கள் அரைகுறை ஆடையுடன் காணப்பட்டனர். இந்த முதியோர் இல்லம் முற்றிலும் சட்டவிரோதமானது.
ஆசிரமத்தில் 42 முதியோர் வசித்து வந்தனர். அவர்களில் மூன்று முதியோர் வெள்ளிக்கிழமை சமூக நலத்துறையால் நடத்தப்படும் முதியோர் இல்லத்திற்கு மாற்றப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் அடுத்த ஐந்து நாள்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற முதியோர் இல்லங்களுக்கு மாற்றப்படுவார்கள். நிர்வாகத்தின் உதவியுடன் முதியோர் இல்லம் சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.