;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பை மேடு தீ விபத்து: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி – இளங்குமரன் கவலை!

0

யாழ். மாநகர சபையின் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்ச்சியாக தீ விபத்து ஏற்பட்டு வருவதனால் சுகாதார பாதிப்பு ஏற்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

அத்தோடு, குப்பைகளை சரியான முறையில் சேகரித்து, வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

தகவலை அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர், நிலைமையை பார்வையிட்டு ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில்,

தீயணைப்பு வாகன பற்றாக்குறை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது.

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனம் ஒன்று மட்டுமே முறையாக இயங்குவதாகவும், ஏனைய இரண்டும் பழுதடைந்து இயங்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும், இதனாலேயே குறித்த ஒரு பவுஸரின் உதவியோடு நீர் விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

குப்பை மேடு எரிவதால் ஏற்படும் புகை மற்றும் தீயினால், அப்பகுதி மக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், குப்பைகளை முறையாக அகற்றி, எரிவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குப்பை எரிவதால் வெளிவரும் நச்சு வாயுக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.

குப்பை மேடு எரிவதால் எழும் துர்நாற்றம் மற்றும் புகை மண்டலம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. குப்பைகள் எரியாமல் இருக்க, தீத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்பை மேடுகளை கண்காணிக்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மூலம், யாழ்ப்பாணத்தில் குப்பை மேடு எரிவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம், மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் முடியும் என தெரிவித்தார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.