;
Athirady Tamil News

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம் – தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்த பல்கலைக்கழகம்

0

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை, தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், அங்கு கிடைக்கப்பெற பல்வேறு சான்றுகள் மூலம், தமிழ்ச் சமூகம், படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக விளங்கியதையும், 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கீழடியில் நகர நாகரிகம் இருந்ததை உறுதிப்படுத்திய தொல்லியல்துறை அதை புத்தகமாகவும் வெளியிட்டது.

மேலும், அங்கு ஆய்வு செய்த தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் திருத்தம் கோரிய மத்திய அரசு, தற்போது வரை அதை வெளியிட மறுத்து வருகிறது.

கீழடி தமிழரின் முகம்
இந்நிலையில், கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம் எப்படி இருக்கும் என்பதை பிரித்தானியாவின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக உதவியுடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியில் கிடைக்கப்பெற்ற மண்டை ஓட்டினை அடிப்படையாக வைத்து, முகத்தின் மேற்பகுதி அங்கு கிடைத்த தொன்மங்களில் அடிப்படையிலும், கீழே தாடை போன்ற பகுதிகள் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

“இந்த படங்கள் 80% அறிவியல், 20% கலை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்பு பகுதிகளிலிருந்து DNA ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பழங்கால தமிழர்களின் வழித்தோன்றல்களை கண்டறிய உதவும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு துறைத் தலைவர் பேராசிரியர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

கொந்தகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட புதைகுழிகளின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்த பிறகு, பெரும்பாலான எலும்புக்கூடு எச்சங்கள் சுமார் 50 வயதுடையவர்களுடையது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டனர்.

மேலும், ஆண்களின் சராசரி உயரம் 170.82 செ.மீ (5 அடி 7″) ஆகவும், பெண்களின் சராசரி உயரம் 157.74 செ.மீ (5 அடி 2″) ஆகவும் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் #கீழடி-யில்!” என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.