ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டம்? இளம்பெண் கைது!
உக்ரைன் சிறப்புப் படை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 23 வயது இளம்பெண் ஒருவரை ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரஷியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர், அந்நாட்டில் உக்ரைன் சிறப்புப் படையினரின் உத்தரவின்பேரில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக ரஷிய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ரஷிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண், உக்ரைனின் சிறப்புப் படை அதிகாரிகளுடன் வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திலுள்ள பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரை அந்தப் பெண் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததுடன், அவரது காரில் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை பொறுத்த முயன்றுள்ளார்.
இதையடுத்து, அவர் வெடிகுண்டை பொறுத்தியபோது ரஷிய அதிகாரிகள் அந்தப் பெண்ணை சுற்றிவளைத்து கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அந்த இளம்பெண் ரஷியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு நாட்டில் குடியுரிமைப் பெற திட்டமிட்டு, இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உக்ரைன் ஆதிகாரிகளின் உத்தரவின்படி அந்த இளம்பெண் அங்குள்ள ரயில்வே கட்டமைப்புகள் மீது தீ வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, மெட்டா நிறுவனத்தின், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளின் நடவடிக்கைகள் ரஷியாவில் தீவிரவாதச் செயலாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.