தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில், திருமணமான 45 நாள்களில், தனது மாமாவுடனான தவறான உறவை கைவிட முடியாமல், கணவரைக் கொலை செய்திருக்கிறார் குஞ்ஜா சிங். ஜூன் 24ஆம் தேதி, நபிநகர் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த 24 வயது பிரியன்ஷு குமார் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், இது கூலிப்படையினரின் வேலையாக இருக்கலாம், தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால், தீவிர விசாரணையில், பிரியன்ஷுவின் சொந்த மனைவியே இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
இது குறித்து காவல்துறை கூறுகையில், பிரியன்ஷு மனைவிக்கும், அவரது மாமா ஜீவன் சிங் (52) இடையே 15 ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவு இருந்திருக்கிறது. குடும்பத்தினரின் கட்டாயத்தின்பேரில், குஞ்சா சிங், பிரியன்ஷுவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், அவரால் பிரியன்ஷுவுடன் வாழ முடியவில்லை. அப்போதுதான் தேனிலவு கொலை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைப் பார்த்து, தானும் கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஜீவன் சிங்குடன் இணைந்து, புதிதாக சிம் கார்டு, செல்போன் வாங்கி, கூலிப் படையை அமர்த்தியுள்ளார்.
சம்பவத்தன்று, பிரியன்ஷு, வாராணசியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, தனது மனைவியிடம் தான் எங்கு வந்துகொண்டிருக்கிறேன் என்பதை தெரிவிக்க, அவரும் கூலிப்படைக்கு அந்த தகவலைக் கூறியிருக்கிறார். அவர்கள் பிரியன்ஷுவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.
பிறகு விசாரணையின்போது பிரியன்ஷுவை, அவரது மனைவியே ஆள்களை அமர்த்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஜீவன் சிங் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
தேனிலவு கொலையே நாட்டை உலுக்கிய நிலையில், அதனைப் பார்த்து பிகாரில் இப்படியொரு கொலை நடந்திருப்பது, உள்ளூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.