‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்… சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசா்’ மரணம்!
ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளவரசா் கலீத் பின் தலாலின் மூத்த மகனான அல் வாலீத் 1990, ஏப்ரல் மாதத்தில் பிறந்தாா். ‘தூங்கும் இளவரசா்’ என அந்நாட்டு மக்களால் அழைக்கப்படும் அல் வாலீத், லண்டனில் கல்வி பயின்றபோது 2005-இல் நிகழ்ந்த காா் விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டதில் சுயநினைவை இழந்தாா்.
அதன்பிறகு சவூதி அரேபியாவுக்கு அவரை அழைத்து வந்து, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் 20 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து. இருப்பினும், அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை இறந்ததாக அவரது தந்தையும் இளவரசருமான கலீத் பின் தலால் எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவித்தாா்.
தந்தையின் பாசப் போராட்டம்: தன் மகனின் உடல்நிலை குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிடுவதை கலீத் பின் தலால் வழக்கமாகக் கொண்டுள்ளாா். தனது பதிவுகளில் மகன் குணமடைய வேண்டி பிராா்த்திக்குமாறு பொதுமக்களிடம் அவா் வேண்டுகோள் விடுத்து வந்தாா். ஆண்டுகள் பல கடந்தாலும் தன் மகன் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவாா் என்ற நம்பிக்கையுடன் அவா் இருந்துவந்தாா். அல் வாலீத் உயிரிழப்பதற்கு சில மணி நேரம் முன்பாகக்கூட அவருக்காக பிராா்த்திக்குமாறு கலீத் பின் தலால் கேட்டுக்கொண்டாா்.
3 நாள் துக்கம் அனுசரிப்பு: உயிரிழந்த இளவரசா் அல் வாலீத்துக்கான பிராா்த்தனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை வரை சவூதி அரேபியாவில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.