;
Athirady Tamil News

அண்ணன் – தம்பியை திருமணம் செய்த இளம்பெண்…எதற்காக தெரியுமா?

0

புதுடெல்லி,

கணவர் இருக்கும்போது ஒரு பெண் 2 ஆணையோ, மனைவி இருக்கும்போது ஒரு ஆண் 2 பெண்ணையோ திருமணம் செய்வது நம் நாட்டின் சட்டப்படி குற்றமாகும். ஆனால் பழங்குடியின சமூகங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை பாதுகாப்பதற்கு இந்திய சட்டங்களில் விதிகள் உள்ளன.

இந்தநிலையில் சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா? ஆம் முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் ஊரைகூட்டி மேளதாளங்கள் முழங்க சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

இந்தியாவில் வடமாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் ஒரே பெண்ணை 1க்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணம் செய்யும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த பழக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதுபோன்ற திருமணங்கள் பொதுவெளியில் பலர் அறிய நடப்பதில்லை. வீட்டுக்குள்ளேயே உறவினர்கள் மத்தியில் மட்டுமே நடைபெறும். இந்த திருமணத்தில் ஒரே பெண்ணை அண்ணன் – தம்பிகள் என ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அதனால் அதுபோன்ற திருமணங்கள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. ஆனால் இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் ஒரே பெண்ணை அண்ணன் – தம்பி 2 பேர் பொது வெளியில் பலர் அறிய பகிரங்கமாக வெகு விமரிசையாக திருமணம் செய்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மவுர் மாவட்டத்தில் உள்ள ஷில்லாய் கிராமத்தில் இந்த திருமணம் நடந்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த அண்ணன் – தம்பியான பிரதீப் நெகி, கபில் நெகி ஆகியோர் தான் ஒரே பெண்ணை மணந்துள்ளனர். இவர்கள் ஹட்டி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள குன் ஹட் என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சுனிதா சவுகான் என்பவர்தான் மணமகள் ஆவார்.

சுனிதாவை அண்ணன் – தம்பியான பிரதீப் மற்றும் கபில் இருவருமே ஊரறிய பலரது முன்னிலையில் பொதுவெளியில் திருமணம் செய்துகொண்டனர். கிராமமக்கள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்ற இந்த திருமண சடங்குகள் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளன. 3 நாட்களுமே நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்த திருமணம் பலரையும் ஆழ்த்தி உள்ளது. ஒரே பெண்ணை மணந்த சகோதரர்களில் ஒருவரான பிரதீப் அரசு ஊழியர் ஆவார். அவர் மத்திய அரசின் ஜல்சக்தி துறையில் பணியாற்றி வருகிறார். அவரது தம்பி வெளிநாட்டினர் விருந்தினர் உபச்சரிப்பு துறையில் பணியாற்றி வருகிறார்.

ஹட்டி இனத்தில் இதுபோல் ஒரே பெண்ணை 2 பேர் திருமணம் செய்யும் முறை ஆண்டாண்டு காலகாலமாகவே வழக்கில் இருந்து வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் திருமணம் செய்யும் இந்த முறைக்கு ஜோடிதரன், திரவுபதி பிரதா என்று பாரம்பரிய பெயருடன் அழைக்கின்றனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மவுர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் இன்னும் வழக்கத்தில் உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் டிரான்ஸ் கிரி பகுதியில் உள்ள பதானா கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இதுபோன்ற 5 திருமணங்கள் நடந்துள்ளன. இந்தியாவில் ஒரே பெண்ணை திருமணம் செய்வது சட்டவிரோதம் ஆகும். ஆனால் பழங்குடியின சமூகங்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளை பாதுகாப்பதற்கு இந்திய சட்டங்களில் விதிகள் உள்ளன. அதன்படி ஹட்டி இனத்தவர்களின் இந்த திருமணத்தை ஜோடிதரன் சட்டத்தின் கீழ் இமாச்சல பிரதேசம் ஐகோர்ட்டு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இந்த திருமணம் குறித்து மணப்பெண் சுனிதா கூறுகையில்,

அண்ணன் – தம்பி இருவரையும் திருமணம் செய்யும் முடிவு என்னுடையது. நானே விரும்பி இந்த முடிவை எடுத்தேன் இந்த திருமணத்திற்கு என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை இந்த பாரம்பரிய வழக்கத்தை பற்றி நான் நன்றாக அறிவேன். எனவே விருப்பப்பட்டுத்தான் இந்த திருமண முறையை தேர்ந்தெடுத்தேன் என்றார்.

இது குறித்து மணமகன் பிரதீப் கூறுகையில், எங்கள் இனத்தில் ஒரு பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணம் செய்யும் பழக்கம் பாரம்பரியமானது. அந்த பாரம்பரியத்தை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அதனால் எங்கள் பாரம்பரியத்தை பின்பற்றி ஒரே பெண்ணை மணந்தோம். மேலும் இது எங்கள் குடும்பத்தினர் அனைவரும் எடுத்த முடிவு ஆகும் என்றார்.

மற்றொரு மணமகன் கபில் கூறுகையில்,

நான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அங்கேயே வசிக்கிறேன். ஆனால் இந்த திருமணத்தின் மூலம் ஒரே பெண்ணை நானும் எனது அண்ணனும் மனந்ததால் எங்கள் மனைவிக்கு ஒட்டுமொத்த குடும்பமும் ஆதரவாக உள்ளது. அவர் மீது நாங்கள் அனைவருமே அன்பு காட்டுகிறோம் என்றார்.

இந்த திருமண வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது .

நம் நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்றாலும் கூட இமாச்சல் பிரதேசம், அண்டை மாநிலமான உத்தரகாண்ட்டில் இன்னும் கூட ஒருவர் 2 திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. இந்த ஹட்டி பழங்குடியினர் 2 ஆண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. இதன்மூலம் ஒரு கணவருக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்தால் இன்னொருவர் மூலமாக திருமண உறவு உயிர்ப்புடன் இருக்கும். இது அவர்களின் காலாசாரமாக தொடர்ந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.