;
Athirady Tamil News

தீராத விளையாட்டுப் பிள்ளை… 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

0

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக பணக்கார இஸ்லாமிய ஆண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆசிரியர் எனக் கூறப்படும் சமீரா பாத்திமா, இதுவரை 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்களை மிரட்டி பணத்தையும் பெற்றுள்ளார்.

இறுதியாக, 9 வது திருமணத்துக்கு தயாராக இருந்த நிலையில், காவல்துறைக்கு பாதிக்கப்பட்ட ஒரு ஆண் அளித்த புகாரைத் தொடர்ந்து நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏமாற்றியது எப்படி?

மேட்ரிமோனி வலைதளம் மற்றும் போலி முகநூல் கணக்குகள் மூலம் பணக்கார இஸ்லாமிய ஆண்களை தொடர்பு கொள்ளும் சமீரா, தன்னை விவாகரத்து பெற்ற பெண்ணாகவும் குழந்தை இருப்பதாகவும் கூறி அவர்களின் அனுதாபத்தையும் நம்பிக்கையும் பெற புனயப்பட்ட கதைகளை கூறியுள்ளார்.

அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவுடன் திருமணம் செய்துகொள்வார். பின்னர், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் பொதுவெளியில் அவமானப்படுத்தப் போவதாகவும் அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதற்காக ஒரு மோசடி கும்பலையும் சமீரா ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் 8 ஆண்களை சமீரா ஏமாற்றியிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவரிடம் ரூ. 50 லட்சம் மற்றொருவரிடம் ரூ. 15 லட்சம் பணத்தைப் பறித்துள்ளார். அவர்களிடம் பணமாகவும் வங்கி பரிவர்த்தை மூலமாகவும் பெற்றுள்ளார். ஏமாற்றப்பட்ட 8 ஆண்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மிரட்டல் மூலம் சமீரா பெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீராவின் வலையில் சிக்கியவர்களில் ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி, நாக்பூர் தேநீர் கடையில் வைத்து சமீராவைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், சமீராவின் மோசடி கும்பலில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.