;
Athirady Tamil News

தனக்குத் தானே கல்லறை தோண்டிய இஸ்ரேலிய பிணைக்கைதி : ஹமாஸ் வெளியிட்ட பகீர் வீடியோ: நடப்பது என்ன?

0

காசாவில் உள்ள சுரங்கப்பாதையில் இஸ்ரேலிய பிணைக்கைதியின் திகிலூட்டும் வீடியோ ஆதாரத்தை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர்.

பிணைக்கைதியின் வீடியோ
ஹமாஸ் அமைப்பால் வெளியிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோவில், 24 வயதுடைய இஸ்ரேலிய பிணைக்கைதியான எவியாடார் டேவிட்(Evyatar David), ஒரு சுரங்கப்பாதையில் தனக்குத் தானே கல்லறை தோண்டுவதைக் காட்டுகிறது.

அவர் மிகவும் மெலிந்து, பலவீனமாக காணப்படுகிறார். கடந்த 48 மணி நேரத்தில் ஹமாஸ் வெளியிட்ட டேவிட்டின் இரண்டாவது வீடியோ இதுவாகும்.

எவியாடார் டேவிட் குடும்பத்தினரின் அறிக்கை
டேவிட் அந்த வீடியோவில், “நான் இப்போது செய்வது என் சொந்த கல்லறையை தோண்டுவதுதான். ஒவ்வொரு நாளும் என் உடல் பலவீனமாகி வருகிறது.

நான் நேரடியாக என் கல்லறைக்கு நடந்து கொண்டிருக்கிறேன். என் குடும்பத்துடன் என் படுக்கையில் தூங்க, எனக்கு நேரம் இல்லை” என்று மெதுவாகப் பேசுகிறார். பேசி முடித்ததும், அவர் உடைந்து அழுகிறார்.

இந்த வீடியோவை வெளியிட டேவிட்டின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். “பிரச்சாரத்திற்காக எங்கள் மகனை வேண்டுமென்றே பட்டினி போடுவது உலகின் மிக பயங்கரமான செயல்களில் ஒன்றாகும்.

ஹமாஸின் பிரச்சாரத்திற்கு மட்டுமே அவர் பட்டினி கிடக்கிறார்” என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

நெதன்யாகுவின் கண்டனம்
இதையடுத்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டேவிட்டின் குடும்பத்தினருடன் உரையாடினார்.

அப்போது, இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார். அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க தங்கள் அரசாங்கத்தின் முயற்சிகள் “தொடர்ந்து மற்றும் இடைவிடாமல்” நடந்து வருவதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஹமாஸ் “பிணைக்கைதிகளை வேண்டுமென்றே பட்டினி போட்டு, அதை ஒரு இழிந்த மற்றும் தீய முறையில் வெளியிடுகிறது” என்றும் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.

பிணைக்கைதிகள் நிலைமை மற்றும் பொதுமக்களின் கோரிக்கை
அக்டோபர் 7, 2023 தாக்குதலில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய போராளிகளால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 49 பேரில் டேவிட்டும் ஒருவர்.

அந்தத் தாக்குதலில் 1,219 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தியது, இதில் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

டேவிட்டின் வீடியோ தவிர, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டது. அதில் 21 வயதான ரோம் பிரஸ்லாவ்ஸ்கி என்ற ஜேர்மன்-இஸ்ரேலிய குடிமகன் பிணைக்கைதியாகவும், மிகவும் மெலிந்து காணப்படுகிறார். இந்த இரண்டு வீடியோக்களும் பிணைக் கைதிகளை விடுவிக்க புதிய பேச்சுவார்த்தைகளை நடத்த இஸ்ரேலில் பொதுமக்களின் கோரிக்கைகளை அதிகரித்துள்ளன.

சனிக்கிழமை மாலை டெல் அவிவில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கூடி, பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். இது போரின் தொடக்கத்திலிருந்து நடந்த மிகப்பெரிய பேரணிகளில் ஒன்றாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.