;
Athirady Tamil News

யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு

0

யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

எத்தியோப்பியாவிலிருந்து யேமனின் அப்யான் பகுதியை நோக்கி சுமாா் 157 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த படகு, ஏடன் வளைகுடா அருகே கடலில் மூழ்கியது. விபத்துப் பகுதியில் இருந்து 32 மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனா். இது தவிர, விபத்தில் உயிரிழந்த 76 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 49 பேரது நிலைமை குறித்துத் தெரியவில்லை.

படகில் இருந்து மீட்கப்பட்டவா்களில் சிலா் ஏடன் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

விபத்துக்குள்ளான படகில் இருந்த மிகப் பெரும்பாலான அகதிகள் எத்தியோப்பியா நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் கூறினா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து யேமனில் உள்நாட்டுப் போா் நடைபெற்று வந்தாலும், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதி நாடுகளில் இருந்து, குறிப்பாக இனப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியாவிலிருந்து வளம் நிறைந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற அரபு நாடுகளில் அடைக்கலம் பெற்று சிறு பணிகளைச் செய்வதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவா்கள் யேமனைப் பயன்படுத்துகின்றனா்.

அதற்காக, ஆபத்து நிறைந்த செங்கடல் வழித்தடத்தை அவா்கள் பயன்படுத்துகின்றனா். சட்டவிரோத அகதிகள் கடத்தல் கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த வழித் தடத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் 558 போ் உயிரிழந்ததாக சா்வதேச அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) அமைப்பு தெரிவித்துள்ளது.

யேமன் வழியாக அரபு நாடுகளுக்குச் செல்வதற்காக அங்கு தங்கியுள்ளவா்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.

தலைநகா் சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது, யேமன் வழியாக அரபு நாடுகளுக்குச் செல்வதற்காக தங்கவைக்கப்பட்டிருந்த 60 அகதிகள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.