;
Athirady Tamil News

பாகிஸ்தான் பருவமழைக்கு 141 குழந்தைகள் உள்பட 302 பேர் பலி, 727 பேர் காயம்!

0

பாகிஸ்தானில் இடைவிடாத பெய்த பருவமழையால் குழந்தைகள் உள்பட இதுவரை 302 பேர் உயிரிழந்துள்ளனர், 727 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கடந்த சில நாள்களாக இடைவிடாது பெய்துவரும் பருவமழையால் அங்கு பல்வேறு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இறந்தவர்களில் 104 ஆண்கள், 57 பெண்கள் மற்றும் 141 குழந்தைகள் அடங்குவர், காயமடைந்தவர்களில் 278 ஆண்கள், 207 பெண்கள் மற்றும் 242 குழந்தைகள் அடங்குவர்.

கனமழையால் வீடுகள் மற்றும் கால்நடைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன, 1,678 வீடுகள் சேதமடைந்துள்ளன, அதேசமயம் 428 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாபில் ஒருவரும் கைபர் பக்துன்க்வாவில் ஒரு குழந்தையும் வீடு இடிந்து விழுந்த சம்பவங்களில் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் காயமடைந்தனர்.

ஆகஸ்ட் 5 முதல் 10 வரையிலான காலகட்டத்தில், மேற்கு திசையிலிருந்து புதிய அலைகள் வீசுவதால், மேல் மற்றும் மத்தியப் பகுதிகளுக்கு மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜீலம் மற்றும் செனாப் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவ்ஷேராவில் உள்ள காபூல் நதியில் குறைந்த வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கில்கிட்-பால்டிஸ்தானில், ஹன்சா நதி மற்றும் ஷிகார் நதிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஹிஸ்பர், குன்ஜெராப், ஷிம்ஷால், பிரால்டு, ஹுஷே மற்றும் சால்டோரோ ஆறுகள் உள்ளிட்ட அவற்றின் துணை நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.