;
Athirady Tamil News

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் கொள்ளை போகின்றன! – ஐ.நா தகவல்

0

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய லாரிகள், இடையிலே வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.

தங்கள் நாட்டு பணயக் கைதிகளை மீட்கும்பொருட்டு இஸ்ரேல், காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர். அங்குள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் பசியால் செத்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்ரேலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்க அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

காஸாவுக்குச் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் காஸாவுக்குச் செல்லும் உணவு உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா. புள்ளிவிவரங்களுடன் தகவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. புள்ளிவிவரங்களின்படி, கடந்த பல மாதங்களாக மனிதாபிமான உதவிகளுடன் காஸாவிற்குள் நுழைந்த ஒவ்வொரு 10 லாரிகளில் கிட்டத்தட்ட 9 லாரிகள் காஸா மக்களால் அல்லது இஸ்ரேல் ராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

மே மாதம் மொத்தம் 2,604 லாரிகள் ஐ.நா.வால் காஸாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவற்றில், 2,309 அதாவது 88% லாரிகள் திட்டமிட்ட இடத்தை அடையவில்லை, அதற்கு முன்னதாகவே கைப்பற்றப்பட்டுள்ளன

இதேபோல ஜூன் மாதத்தில் 1,155 லாரிகள் காஸாவிற்குள் நுழைந்த நிலையில் 1,048 (90.7%) லாரிகள் இலக்குகளைச் சென்றடையவில்லை. ஜூலை மாதத்தில் 1,161 லாரிகளில் உணவு உள்ளிட்டப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில் 1,093 லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. ஆனால் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.