புடினுக்கு மெலானியா ட்ரம்ப் எழுதிய கடிதம்: தன் கைப்பட ஒப்படைத்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்காவின் அலாஸ்காவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தன் மனைவி மெலானியா ட்ரம்ப் எழுதிய கடிதம் ஒன்றை புடினிடம் கையளித்துள்ளார் ட்ரம்ப்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன?
ட்ரம்ப் புடினிடம் ஒப்படைத்த அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆனாலும், புடினுக்கு தான் எழுதிய கடிதத்தில், உக்ரைன் போரின் காரணமாக கடத்தப்படும் குழந்தைகள் குறித்து மெலானியா கவலை தெரிவித்திருந்ததாக வெள்ளை மாளிகை அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உக்ரைன் நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், சிறுவர் சிறுமியர், அவர்களுடைய பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், ரஷ்யா அல்லது ரஷ்யா ஆக்கிரமித்துள்ள ரஷ்யப்பகுதிகளுக்கு கடத்தப்படுவது, ஐ.நா இனப்படுகொலை ஒப்பந்தத்தின்படி போர்க்குற்றம் என உக்ரைன் கூறிவருகிறது.
இந்நிலையில், மெலானியா குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பில் கவலை தெரிவித்து ட்ரம்புக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Andrii Sybiha சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மையான மனிதநேயத்தின் வெளிப்பாடு என்றும் Andrii Sybiha குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா 2022ஆம் ஆண்டு உக்ரைனை ஊடுருவியது முதல், பல மில்லியன் குழந்தைகளை துயரத்திற்குள்ளாக்கியுள்ளதாகவும், அவர்களுடைய உரிமைகளை மீறியுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது