;
Athirady Tamil News

எஃப்பிஐ தேடி வந்த பெண் குற்றவாளி இந்தியாவில் கைது! மகனைக் கொன்றவர்

0

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ அமைப்பினால் தேடப்பட்டு வரும் மிக முக்கிய 10 குற்றவாளிகளில் 4வது இடத்தில் இருக்கும் பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்து முக்கிய குற்றவாளிகளில், தன்னுடைய சொந்த குழந்தையைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதல் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்டி ரோட்ரிக்யூஸ் சிங் என்ற அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டார். 40 வயதாகும் இவர், கடந்த 2022ஆம் ஆண்டு தன்னுடைய 6 வயது மகன் நோயெல் ரோட்ரிக்யூஸை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து தப்பிச் சென்றார்.

சின்டியும், அவரது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ஷ்தீப் சிங் மற்றம் அவர்களது ஆறு பிள்ளைகளும் 2023ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இந்தியாவுக்குச் செல்லும் விமானத்தில் கடைசியாகத் தென்பட்டுள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்புதான், சின்டி, தன்னுடைய மகன் காணவில்லை என்று அதிகாரப்பூர்வமாக புகார் அளித்திருந்தார்.

அந்த விமானத்தில் நோயல் இல்லை, மற்றும் அவர் வேறு எங்கிருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கப்பெறவில்லை. தன்னுடைய மகன் எங்கிருக்கிறார் என்ற எந்த தகவலும் தெரியவில்லை என்று சின்டி காவல்நிலையத்தில் கூறியிருக்கிறார். சிறுவனின் தந்தை மெக்ஸிகோவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் மிக முக்கிய 10 குற்றவாளிகளில் நான்காவது குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டார். கொலை வழக்கை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்க சட்டவிரோதமாக விமானத்தில் நாட்டை விட்டுச் சென்ற வழக்கையும் கொலை வழக்கையும் சேர்த்து அவர் எதிர்கொள்ளவிருக்கிறார். இது அனைத்துக் குற்றவாளிகளுக்குமான ஒரு எச்சரிக்கை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு சின்டியை தேடப்பட்டு வரும் நபராக காவல்துறை அறிவித்திருந்தது. இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல் உதவியோடு அவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

குற்றவாளிகளுக்கு எந்த எல்லையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 பேரைக் கொண்ட தேடப்பட்டு வரும் மிக முக்கியக் குற்றவாளிகளின் பட்டியல் எஃப்பிஐ வசம் உள்ளது. ஆனால், அதில், சொந்த மகனையே கொலை செய்ததாக இடம்பெற்ற முதல் பெண் இவர்தான், அதனால்தான் அவர் நான்காவது இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

மகன் நியோல் பற்றி நடத்திய விசாரணையில், நியோலுக்கு பேய் பிடித்திருந்ததாக சின்டி நினைத்ததாகவும், தனக்குப் பிறந்த இரட்டைப் பிள்ளைகளுக்கு அதனால் தீங்கு நேரிடும் என பயந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடுமையான நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த நியோல், பட்டினிப் போட்டு, குடிக்கத் தண்ணீர் கொடுக்காமல் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.