;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் தொடர் பயங்கர நிலநடுக்கம்! 800 பேர் பலி, 2500 பேர் காயம்!

0

ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 800 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என பதிவாகியிருந்ததாகவும், அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணம்தான், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இங்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்றும் ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதால் 800 பேர் பலியானதாகவும், 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒரே கிராமத்தில் 30 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானின், நகங்கர் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை வழியாக மருத்துவமனை கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் பாதுகாப்புப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரே மாகாணத்தில் அடுத்தடுத்து மூன்று கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சேதமடைந்திருப்பதாகவும், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, கடுமையான வெள்ளத்தால் அந்நாடு பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் உள்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்திருந்த நிலையில் நிலநடுக்கம் அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. இதனால் மீட்புப் படையினர் பல ஊர்களுக்குச் செல்ல சாலை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேல் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணி இடம் வகிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.