;
Athirady Tamil News

கெஹெல்பத்தர உள்ளிட்ட குற்ற குழுவினரிடம் இருந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்

0

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், மித்தெனிய – கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்டமையும், மித்தெனிய – தொரகொலயாய பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் தங்களுக்குத் தெரிந்தே நடத்தப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இலங்கை பொலிஸார், இந்தோனேசியாவின் ஜகார்த்தா பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் உள்ளிட்டோர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்போதே இந்த விடயங்களை சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, விசாரணைக்கு உட்பட்டு வரும் ஐந்து பேரில் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் நேற்று மேல் வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மித்தெனிய மற்றும் எம்பிலிபிட்டியவிற்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், அவர்களுடன் தொடர்புடைய ஒரு குழுவினரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, குறித்த குழுவினர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர்களது தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்த 28 கையடக்க தொலைபேசிகளை இந்தோனேசிய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகள் குறித்த கையடக்க தொலைபேசிகளை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் உட்பட பல தரப்பினர் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.