;
Athirady Tamil News

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

0

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும் தலைவிரித்தாடும் ஊழல், பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்தும் இளைஞர்கள் இரண்டு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் காத்மண்டுவில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இளைஞர்களின் போராட்டம் அரசுக்கு எதிரான வன்முறையாக மாறிய நிலையில், நேற்றிரவு சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

இருப்பினும், பிரதமரை பதவி விலக வலியுறுத்தி இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள், நாடாளுமன்றம், அமைச்சரவைக் கட்டடங்கள், அரசு அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இந்த நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக பிரதமர் சர்மா ஓலி அறிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியை நேபாள ராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். ராணுவத்தின் ஹெலிகாப்டர் பிரதமரின் இல்லத்தில் தரையிறங்கியுள்ளது.

மேலும், நேபாள அமைச்சர்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கெனவே, உள்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் அவர்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, வங்கதேசத்தை போன்று இடைக்காலமாக ராணுவ ஆட்சி கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.