பாகிஸ்தான்: 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாரியின் வீட்டை இடித்த மர்ம நபர்கள்!
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்குவாவில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், கைபர் பக்துன்குவாவின் மொஹ்மாந்த், வடக்கு வசிரிஸ்தான் மற்றும் பன்னு ஆகிய மாவட்டங்களில் பதுங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்.9 இரவு முதல் செப்.10 அதிகாலை வரை பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மொஹ்மாந்த் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதேபோல், வடக்கு வசிரிஸ்தானின் தட்டா கெல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 4 பயங்கரவாதிகளும், பன்னுவில் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன், லக்கி மார்வாட் பகுதியில் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரது குடும்பத்தினரை பிணைக் கைதிகளாகப் பிடித்து, வீட்டின் ஒரு பகுதியை இடித்து தரைமட்டமாக்கியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைந்தது முதல் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.