;
Athirady Tamil News

நேபாள வன்முறையில் 51 பேர் பலி! 1,300 பேர் காயம்! – அரசு தகவல்

0

நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராகவும் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராகவும் அந்த நாட்டு இளைஞா்கள் கடந்த திங்கள்கிழமை தீவிர போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களை காவல்துறை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறையில் 19 இளைஞர்கள் இறந்தனர்.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா் மற்றும் பிரதமா் இல்லங்களுக்குப் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். இதுதவிர முன்னாள் பிரதமா்கள், அமைச்சா்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

நேபாளத்தில் இடைக்கால பிரதமரை நியமிக்கும் பணியில் இளைஞர் போராட்டக்குழு ஈடுபட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக ஆவார் என்று கூறப்படுகிறது.

இதற்காக ராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தற்போது அங்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. வன்முறையில் சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் சுமார் 12,500 சிறைக் கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீரமைக்கும் பணியில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.