;
Athirady Tamil News

நேபாள வன்முறையை ஆவணமாக்கிய பிரிட்டன் காணொளிப் பதிவர்..! வரலாறான சுற்றுப் பயணம்!

0

பிரிட்டனைச் சேர்ந்த Vlogger – வீலாகர் (காணொளிப் பதிவர்) நேபாளத்தில் நடந்த கலவரத்தை விடியோவாக பதிவிட்டு வைரலாகியுள்ளார்.

சுற்றுலாச் சென்றவருக்கு வரலாற்று நிகழ்வினைப் படம்பிடிக்கும் அனுபவம் கிடைத்ததாக சமூக வலைதளங்களில் இணையதள வாசிகள் பாராட்டி வருகிறார்கள்.

வரலாறான சுற்றுப் பயணம்!

தாய்லாந்தில் இருந்து பிரிட்டனுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ஹாரி என்ற பிரிட்டன் காணொளிப் பதிவர் நேபாளத்தில் வன்முறை தொடங்கியபோது சிக்கிக்கொண்டுள்ளார்.

தொலைக்காட்சிகளில்கூட காட்டாத சில புகைப்படங்கள், விடியோக்களை அவரது ’விஹேட்தகோல்ட்’ எனும் யூடியூப் விடியோவில் காணக் கிடைக்கிறது.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்ததற்கு எதிராகவும் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராகவும் அந்த நாட்டு இளைஞா்கள் கடந்த திங்கள்கிழமை தீவிர போராட்டத்தைத் தொடங்கினர்.

காவல்துறை அவர்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறையில் 19 இளைஞர்கள் இறந்தனர். வன்முறையில் சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளனர்.

பற்றி எரிந்த நேபாளம்!

மேலும், நேபாளத்தில் சுமார் 12,500 சிறைக் கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதால், நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீரமைக்கும் பணியில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து அந்த வீலாகர் கூறியதாவது:

நேபாளம் பற்றி எரிகிறது. முழுமையான கட்டடமே எரிகிறது. இங்கிருந்து போகும்போது நரகம்போலிருக்கும். என் கண் முன்னாலேயே அனைத்து வாகனங்களில் இருந்தும் புகை வெளியாகிறது.

மக்கள் சிலர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது என்னானது எனக் கேட்டேன். அதற்கு ஒருவர், “மக்கள் போராடுகிறார்கள். அதனால், நாங்கள் ஓடுகிறோம். நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்” என்றார்கள்.

ஊழலுக்கு எதிரான போராட்டம்?

திடீரென யாரோ எங்கிருந்தோ கற்களை வீசினார்கள். சப்தம் எல்லா பக்கமும் இருந்து எதிரொலித்தன. நான் என்ன பார்க்கிறேன் என்பதை என்னாலயே நம்பமுடியவில்லை.

இது சமூகவலைதளத்துக்கான போராட்டம் அல்ல, ஊழலுக்காக என சிலர் கூறினார்கள்.

இந்த ஜென்ஸி சிறுவர்களின் போராட்டத்தை என்னுடைய லென்ஸின் வழியாக பார்ப்பதை நம்பமுடியவில்லை. இந்தப் போராட்டம் ஓய்ந்தபிறகுதான் என்னுடைய இருசக்கர வாகன பயணத்தைத் தொடங்க வேண்டும் என்றார்.

இணையவாசிகள் இவரது விடியோவுக்கு, “நம்பமுடியாத விடியோ. இது வரலாறாக மாறும்”, “அவர் உயிரைப் பணையம் வைத்து எந்தவித பிரசாரமும் இல்லாமல் உண்மை நிலைமையை எடுத்துக் காட்டியுள்ளார்”, “யாருமே காப்பியடிக்க முடியாத விடியோ” எனவும் பலர் புகழ்ந்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.