;
Athirady Tamil News

விண்வெளி நிலையம் சென்ற சரக்கு விண்கலனில் என்ஜின் கோளாறு! சுற்றுப்பாதையில் சிக்கியது!

0

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 5,000 கிலோ சரக்குகளுடன் சென்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இதனால், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற இந்த சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு உள்பட அத்தியாவசியப் பொருள்கள், அவர்களின் ஆய்வுக்குத் தேவையான தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவற்றை சரக்கு விண்கலன் மூலம் அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.11 மணிக்கு (அமெரிக்க நேரம்) ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம், ஆளில்லா ’சிக்னஸ் எக்ஸ்எல்’ என்ற சரக்கு விண்கலன் மூலம் 5,000 கிலோ எடை கொண்ட பொருள்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாசா அனுப்பியது.

விண்வெளி நிலையத்தை புதன்கிழமை சென்றடைய வேண்டிய நிலையில், இந்த விண்கலன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இந்த விண்கலன் சிக்கியுள்ளது.

அடுத்து என்ன?

இதுதொடர்பாக நாசா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

‘சிக்னஸ் எக்ஸ்எல்’ விண்கலனின் பிரதான என்ஜின் திட்டமிட்டதைவிட முன்னதாகவே இன்று அதிகாலையில் செயல்பாட்டை நிறுத்திவிட்டது.

ஐஎஸ்எஸ் -க்கு அருகில் சென்று சுற்றுப்பாதையை அடைவதற்காக இரண்டு உந்து என்ஜின்களை செயல்படுத்திக் கொண்டிருந்தபோது நின்றுவிட்டது.

விண்கலனில் உள்ள மற்ற அனைத்து அமைப்புகளும் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதையடுத்து சர்வதேச விண்வெளி நிலையத்தை திட்டமிட்டபடி புதன்கிழமை விண்கலன் அடையாது, மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருவதால், விண்கலன் சென்றடையும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.