மராட்டியம்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து
மராட்டிய மாநிலம் மத்திய மும்பையில் இருந்து குஜராத்தின் வால்சாட் நகருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த பயணிகள் ரெயில் இன்று மாலை 6.30 மணிக்கு மத்திய மும்பையில் இருந்து வால்சாட் நகருக்கு புறப்பட்டது. அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
மராட்டியத்தின் பால்கர் மாவட்டம் கால்வி ரோடு ரெயில் நிலையத்திற்கு இரவு 9.15 மணியளவில் ரெயில் வந்தபோது அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் அலறியடித்து ரெயிலில் இருந்து கீழே இறங்கினர்.
இது குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர், ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். அதேவேளை, தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.