;
Athirady Tamil News

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

0

ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில், ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி, ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆட்சி அமைத்த தலிபான்கள், முதல்முறையாக இப்படியொரு தடையை விதித்துள்ளனர். இதனால், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைஃபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், செல்போன் வாயிலான இணைய சேவைகள் இயக்கத்தில் உள்ளதாக, ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்.16 ஆம் தேதி, முதலில் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்‌ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில், இன்று (செப்.18) இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதை, குண்டுஸ் மாகாணத்தின் ஆளுநர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், தலிபான் அரசின் இந்த நடவடிக்கை, லட்சக்கணக்கான மக்களின் தகவல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முடக்கியுள்ளது எனவும், பேச்சு சுதந்திரத்துடன் ஊடகப் பணிகளுக்கும் இது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் ஆப்கானிஸ்தானின் ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.