ரஷியாவிலுள்ள ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? -ஸெலென்ஸ்கி
உக்ரைனிலிருந்து ரஷிய படைகளால் நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி வினவியுள்ளார்.
இது குறித்து நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் புதன்கிழமை(செப். 24) ஸெலென்ஸ்கி பேசும்போது: “எங்கள் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நீடிக்கிறது. இதனால் இன்றளவும் வாரவாரம் மக்கள் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். எனினும், போர்நிறுத்தம் ஏற்படவில்லை. காரணம், ரஷியா. ரஷியா போர்நிறுத்தத்தை நிராகரித்து வருகிறது.
ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். உதவிய அனைவருக்குமே நன்றியை உரித்தாக்குகிறேன். ஆனால், அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.